இந்தியாவின் முதல் ஏ.ஐ. ரோபோ ஆசிரியை - கேரளாவில் அறிமுகம்
|திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனையையும், பகுத்தறிவையும் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இந்த தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'ரோபோ' ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'ஐரிஸ்' (IRIS) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கற்பித்தல் பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது.
அதோடு மாணவர்களுடன் உண்மையான ஆசிரியர் போல் உரையாடுகிறது. இந்த ரோபாவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபா ஆசிரியையால் 3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். இந்த ரோபோவை மேக்கர்ஸ் லேப் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.