< Back
தேசிய செய்திகள்
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் - நிர்மலா சீதாராமன்
தேசிய செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் - நிர்மலா சீதாராமன்

தினத்தந்தி
|
1 Feb 2024 11:37 AM IST

நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் சென்ற மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றார். பட்ஜெட் உரையை ஜனாதிபதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

புதிய நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. பா.ஜ.க.வுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது.

சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம். ஊழல் ஒழிப்பையும் வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதிக்காக அரசு பணியாற்றி வருகிறது. எங்கள் அரசு யாரையும் ஒதுக்காத அனைவரையும் அரவணைக்கும் அரசாக செயல்படுகிறது.

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். மின்னணு வேளாண் சந்தையில் 8 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். 34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு, அனைவருக்கும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம்.

பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.10 ஆண்டுகளில் 7 ஐஐடிகள், 19 எய்ம்ஸ், 390 பல்கலை.கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தொழில்கள் தொடங்க பெண்களுக்கு ரூ.30 கோடி அளவில் முத்ரா திட்டத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது. முத்தலாக் தடை, வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களால் மகளிருக்கு பலன் கிடைத்துள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும். ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

வளர்ந்த நாடு என்ற இந்தியாவின் கனவு 2047க்குள் நனவாகும். நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும். நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள். 40,000 சாதாரண ரெயில் பெட்டிகள் 'வந்தே பாரத்' தரத்தில் புதுப்பிக்கப்படும்.

இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும். தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்