இந்தியாவின் 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை பரிசோதனை வெற்றி
|'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சுமார் 80 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் இருந்து 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை இன்று காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சுமார் 80 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இது வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பாகும். இன்றைய சோதனையின்போது, 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை கண்டறியும் கருவி, லாஞ்ச்சர், ரேடார், கட்டுப்பாடு மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.