அமெரிக்க விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்
|அமெரிக்க விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் விமானத்தில் பறக்க தடை பட்டியலில் வைக்கப்பட்டார்.
புதுடெல்லி,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்றிரவு புறப்பட்டு வந்தது.
அந்த விமானத்தில் ஆரியா வோஹ்ரா (வயது 21) என்ற இந்திய மாணவர் பயணித்து உள்ளார். அவர், அமெரிக்காவில் படித்து வந்து உள்ளார். குடிபோதையில் இருந்த அவர், நேற்றிரவு அமெரிக்க பயணி மீது சிறுநீர் கழித்து உள்ளார்.
நடுவானில் விமானம் பறந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது. எனினும், விமானம் இரவு 9.50 மணியளவில் பாதுகாப்பாக டெல்லியை வந்தடைந்தது.
இதுபற்றி அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறும்போது, அந்த நபர், விமானத்தில் இருந்தபோது, விமானிகள் மற்றும் விமானத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையில், இருக்கையில் அமராமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார். விமான ஊழியர்களின் அறிவுரைகளை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார். போதையில் இருந்த அந்த நபரால், சக பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமும் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் கேட்டு கொண்டது.
அந்த பயணிக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய போலீசார் கூறியுள்ளனர். அவர் அமெரிக்க பல்கலை கழகத்தில் படித்து வந்து உள்ளார். அவரை விமானத்தில் பறப்பதற்கான தடை பட்டியலில் வைக்க முடிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நியூயார்க்-புதுடெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சங்கர் மிஷ்ரா என்ற பயணி குடிபோதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர் அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.