இத்தாலியில் இந்திய மாணவர் மர்ம மரணம் : உடலை தாயகம் கொண்டு வர அரசுக்கு பெற்றோர் கோரிக்கை
|கடந்த 1-ம்தேதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க ராவுத்தின் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் ராவத். எம்பிஏ படிக்க இத்தாலிக்கு சென்ற ராவத், வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1-ம்தேதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க ராவுத்தின் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது மகன் செல்போன் எடுக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர் தங்கும் விடுதியின் உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டனர் . அப்போது விடுதி உரிமையாளர் அளித்த தகவல் ராவுத்தின் பெற்றோருக்கு தூக்கி வாரி போட்டது.
உங்கள் மகன் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாகவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மகன் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக ராம் ராவுத்தின் குடும்பத்தினர் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு ஜார்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசு அதிகாரிகளை அணுகி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேற்கு சிங்பூமின் துணை கமிஷனர் அனன்யா மிட்டல், ராம் ராவத் மரணம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், ஜார்கண்ட் உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை முறையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இத்தாலியில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.