மியான்மர் எல்லை வரை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும்: ரெயில்வே தகவல்
|மணிப்பூரில் மியான்மர் எல்லை வரை உள்ள மோரேயில் ரெயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு முடிந்தது.
கவுகாத்தி,
பூடான், மியான்மார் நாடுகளுக்கு இந்திய ரெயில்வே மேற்கொள்ளவுள்ள புதிய திட்டங்களைப் பற்றி வடகிழக்கு எல்லை ரெயில்வேயின் பொது மேலாளர் அன்ஷுல் குப்தா தெரிவித்தார். அதில் இந்தியா-மியான்மார்-பூடான் ரெயில் இணைப்பு பற்றி பல விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர் கூறியதாவது:-
மணிப்பூரில் மியான்மர் எல்லை வரை உள்ள மோரேயில் ரெயில் பாதை அமைப்பதற்கான கணக்கெடுப்பு முடிந்து, மோரே வரையிலான ரெயில் பாதை 2 முதல் 2.5 ஆண்டுகளில் முடிக்கப்படும். வடகிழக்கு பிராந்தியத்தில் இந்திய ரெயில்வேயின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இது இருக்கும், இது மூலோபாய தேவைகள், சுற்றுலா இணைப்புகளுக்கு ஊக்கமளிக்கும்.
கரீம்கஞ்ச்(இந்தியா) மற்றும் ஷாபாஸ்பூர்(வங்காளதேசம்) இடையேயான ரெயில் பாதை மார்ச் 2023க்குள் முடிக்கப்படும். மேலும், பூடானுக்கான முதல் ரெயில் இணைப்புக்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு மார்ச் 2023க்குள் முடிக்கப்படும்.
வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலத் தலைநகரங்களை ரெயில் பாதை மூலம் இணைப்பது குறித்து, இதுவரை திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத் தலைநகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
சிக்கிமில் பணிகள் டிசம்பர் 2023க்குள் ரங்போ வரை முடிவடையும். மிசோரமில் உள்ள சாய்ராங் ரெயில் பாதை திட்டமும் டிசம்பர் 2023க்குள் முடிக்கப்படும்.நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் ரெயில் இணைப்புக்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது, தலைநகர் கோஹிமாவுடனான இணைப்பு மார்ச் 2026க்குள் செயல்படத் தொடங்கும்.
மேகாலயாவில், உள்ளூர் மாணவர் சங்கங்களின் எதிர்ப்பால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்த பிறகு மேகாலயாவில் ரெயில் இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று குப்தா கூறினார்.