காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது
|35 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது செய்யப்பட்டார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி
பஞ்சாப்பை தனி நாடாக மாற்ற காலிஸ்தான் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்த அமைப்புகளுக்கு தடை இருப்பதால் இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இந்த அமைப்புகள் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன.
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் மற்றொரு வடிவமாக 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பு விளங்குகிறது. மறைந்த பாடகர் தீப் சித்து தொடங்கிய இந்த அமைப்பினை தற்போது தலைவராக இருந்து நடத்தி வந்தவர், கடந்த ஆண்டு துபாயில் இருந்து நாடு திரும்பிய அம்ரித் பால் சிங் (வயது 29) ஆவார்.
மத போதகர் என்ற போர்வையில் உலா வந்தாலும், பிரிவினைவாத விஷத்தைப் பரப்பி வந்ததால் சர்ச்சைக்குரியவராக விளங்கி, பஞ்சாப் அரசுக்கு பெருத்த தலைவலியாக மாறிப்போனார்.
போலீஸ் நிலையத்தில் அடாவடி
கடந்த பிப்ரவரி மாதம், அமிர்தசரஸ் புறநகர் அஜ்னாலாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் தனது கூட்டாளி ஒருவர் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அவரை மீட்பதற்காக அங்கு அம்ரித்பால் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் கைகளில் வாள்களையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு படையெடுத்துச் சென்று அதிரடியில் இறங்கினர். அப்போது ஏற்பட்ட மோதலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்ப்பதற்காக அம்ரித்பால் சிங் கூட்டாளியை போலீஸ், அப்போது விடுவித்தது.
கைது செய்ய நடவடிக்கை
இந்த நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி, அஜ்னாலா போலீஸ் நிலையத்தை சூறையாடிய வழக்கில் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முடிவு எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
முதலில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளிகள், ஆதரவாளர்கள் அணி, அணியாக கைது செய்யப்பட்டனர். ஆயுதங்கள் பிடிபட்டன. ஆனாலும் ஒரு மாத காலத்துக்கு மேலாக போலீஸ் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அம்ரித்பால் சிங் பிடிபடாமல் தப்பி வந்தார்.
சுற்றி வளைத்து கைது
இந்த நிலையில், அம்ரித்பால் சிங் நேற்று காலை 6.45 மணிக்கு பஞ்சாபின் மோகா மாவட்டத்தின், ரோட் கிராமத்தில் போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
1984-ம் ஆண்டு, அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அதிரடி உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்தரன்வாலேயின் சொந்த ஊர், இந்த ரோட் கிராமம்தான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
நடந்தது என்ன?
இந்த கைது நடவடிக்கையின் பின்னணி பற்றி சண்டிகாரில் போலீஸ் ஐ.ஜி. சுக்செயின் சிங் கில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டு விட்ட அம்ரித்பால் சிங். அசாம் மாநிலத்தில் உளள திப்ருகாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
உளவுத்தகவல்கள் அடிப்படையில் ரோட் கிராமத்தில் அம்ரித்பால் சிங், எல்லா பக்கங்களிலும் சுற்றி வளைக்கப்பட்டார். தப்பிச் செல்ல இனியொரு வழி இல்லை என்ற நிலை உருவானது. அமிர்தசரஸ் போலீசும், பஞ்சாப் உளவுத்துறை போலீசாரும் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டுதான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அம்ரித்பால் சிங், அங்குள்ள வழிபாட்டுத்தலத்தில் (குருத்வாரா) இருந்தார். அதன் புனிதத்தைக் காப்பதற்காக போலீஸ் அங்கே நுழையவில்லை.
அதே நேரத்தில் எல்லா பக்கங்களிலும் இருந்து சுற்றி வளைத்து விட்ட நிலையில், இனி தப்பிச்செல்ல முடியாது என்ற தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிகை உறுதியான உளவுத்தகவல்கள் அடிப்படையில் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கை 35 நாட்களாக நடந்து வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ வைரல்
இதற்கிடையே ரோட் கிராமத்தில் உள்ள குருத்வாராவில் கூட்டத்தினர் மத்தியில் அம்ரித்பால் சிங் பேசுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இது பிந்தரன்வாலேயின் பிறப்பிடம். இங்குதான் எனக்கு தலைப்பாகை அணிவிக்கும் நிகழ்ச்சியும் (மதச்சடங்கு) நடைபெற்றது. நாங்கள் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் உள்ளோம். கடந்த ஒரு மாதமாக என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சீக்கியர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் அதிகப்படியான நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அது என்னை கைது செய்வது பற்றிய கேள்வியாக இருந்திருந்தால், என்னை கைது செய்வதற்கு பல வழிகள் இருந்திருக்கலாம், நானும் ஒத்துழைத்திருப்பேன். கடவுள்முன் நான் குற்றவாளி அல்ல. ஆனால் உலகப்பூர்வமான கோர்ட்டின் முன் நான் குற்றவாளி என தீர்மானிக்கப்படலாம்.
சரண் அடைய...
நான் தலைப்பாகை அணிவிக்கப்பட்ட அதே இடத்தில் (ரோட்) சரண் அடைய தீர்மானித்தேன். இந்த கைது நடவடிக்கை முடிவு அல்ல. இது ஒரு தொடக்கம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளிகள் 9 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டதும், அவரது மனைவி கிரண்தீப் கவுர், கடந்த வியாழக்கிழமையன்று லண்டனுக்கு செல்ல முயற்சித்தபோது தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதும், அவர் மீதான பிடியை இறுக்கியது.
ஓராண்டு காலம் சிறைவாசம்
கைதான அத்ரித்பால் சிங், ரோட் கிராமத்தில் இருந்து பதிண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து அவர் தனி விமானம் மூலம் அசாமின் திப்ருகார் அழைத்துச் செல்லப்பட்டார். மதியம் 2.20 மணிக்கு அந்த விமானம் அங்கு தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திப்ருகார் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே ஓராண்டு காலம் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சிறையில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டது வரையில் அவர் கடந்து வந்த பாதை இது...
செப்டம்பர் 29, 2022 - 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் ஆனார்.
பிப்ரவரி 10, 2023 - இங்கிலாந்தைச் சேர்ந்த கிரண்தீப் கவுரை அமிர்தசரசில் உள்ள ஜாலுபூர் கெரா கிராமத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
பிப்ரவரி, 16- தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் சாம்கவுர் சாகிப் கிராமவாசியை கடத்தி, தாக்கியதாக வழக்கு பதிவானது.
பிப்ரவரி, 23- அமிர்தசரஸ் அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் ஆதரவாளரை விடுவிக்க படையெடுத்துச் சென்றதுபோல சென்று சூறையாடினார்.
மார்ச், 18- அம்ரித் பால் சிங் தேடுதல் வேட்டையைத் தொடங்கியது போலீஸ்.
ஏப்ரல், 20- கிரண்தீப் கவுர் லண்டன் செல்ல முயன்றபோது அமிர்தசரஸ் விமானத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஏப்ரல், 23- ரோட் கிராமத்தில் அம்ரித்பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.