துருக்கி நிலநடுக்கம் - இந்தியர் ஒருவர் மாயம் என தகவல்
|துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் மாயமாகி உள்ளதாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.
இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. நிலநடுக்க மையப்பகுதிக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் தரை மட்டமாகி இருக்கின்றன.
இடிந்து தரை மட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளை நவீன எந்திரங்கள்உதவியுடன் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுவது, இவ்விரு நாடுகளிலும் தீராத சோகமாக, நெஞ்சை நொறுக்கும் துயரமாக மாறி இருக்கிறது.
இடிபாடுகளில் படுகாயங்களுடன் குற்றுயிராக கிடந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
நிலநடுக்கம் என்னும் இயற்கை பேரழிவினால் பாதிப்புக்குள்ளாகி நிலைகுலைந்து போய் உள்ள இந்த நாடுகளுக்கு உலக நாடுகள் பலவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவிக்கரம் நீட்ட முன் வந்திருப்பது, மனித நேயம் இன்னும் மறைந்து போய் விடவில்லை என்பதை ஆதாரப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
இந்தநிலையில் துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதனிடையே துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் மாயமாகி உள்ளார், காணாமல் போன இந்தியரின் குடும்பத்துடன், மத்திய அரசு தொடர்பில் உள்ளது என்றும் நிலநடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள் 75 பேரிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளதாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. துருக்கியின் தொலைதூர பகுதியில் சிக்கியிருந்த 10 இந்தியர்களும் பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.