உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வெளி கண்காணிப்பு டிரோன்கள் அடுத்த வாரம் சோதனை - பாதுகாப்புத் துறை தகவல்
|ஆளில்லா உளவு பார்க்கும் டிரோன்களின் சோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி,
இந்திய ராணுவம் தற்போது பல நவீன ஆயுதங்களை தனது படைபிரிவில் சேர்த்து வருகிறது. மேலும் வெளிநாட்டு ஆயுதங்களை வாங்குவதற்கு பதில் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி ராணுவத்தில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளுக்கான டிரோன்களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா உளவு பார்க்கும் டிரோன்களின் சோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இச்சோதனையில் டிரோன்களின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமைந்தால் அவற்றை ராணுவத்தில் இணைத்து கொள்வது பற்றி உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இந்திய தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலேயே டிரோன்களை தயாரித்தால் செலவு கணிசமாக குறையும் என்றும் விரைவில் இதுபோன்ற உள்நாட்டு தயாரிப்புகளை தொடங்க டிஆர்.டி.ஓ. திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.