பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி
|பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடி முடக்கம் செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், நாடாளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள், அரசின் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக 6 யூடியூப் தளங்கள் மீது புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதில் மேற்படி யூடியூப் சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தது தெரியவந்தது. இந்த சேனல்கள் மொத்தமாக சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளதும், இவை வெளியிட்ட வீடியோக்கள் 51 கோடிக்கு அதிகமான பார்வைகளை பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசின் முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக பொய் தகவல்களை பரப்பிய இந்த சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.
முன்னதாக இதைப்போன்ற தவறான தகவல்களை வெளியிட்டு வந்த 3 யூடியூப் சேனல்களை முடக்க கடந்த மாதமும் யூடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.