அம்ரித்பால் சிங் தப்பிச்செல்ல அனுமதிக்கக்கூடாது - நேபாளத்துக்கு மத்திய அரசு வேண்டுகோள்
|மற்றொரு நாட்டுக்கு அம்ரித்பால் சிங் தப்பிச்செல்ல அனுமதிக்கக்கூடாது என்று நேபாளத்துக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காத்மாண்டு,
பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத தலைவராக உருவெடுத்து இருக்கும் அம்ரித்பால் சிங்குக்கும், அவரது 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்புக்கும் எதிராக பஞ்சாப் போலீசார் கடந்த 18-ந்தேதி அதிரடி நடவடிக்கையை தொடங்கினர்.
ஜலந்தரில், போலீசாரின் முற்றுகையில் இருந்து அம்ரித்பால் சிங் தப்பினார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், அவர் அண்டை நாடான நேபாளத்துக்கு தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்யுமாறு நேபாள அரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் கடிதம் எழுதியுள்ளது.
இதற்கிடையே அம்ரித்பால் சிங் இந்தியா-நேபாள எல்லை வழியாக தப்பிச்செல்லக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இருநாட்டு எல்லையோரத்தில் பணியில் இருக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் உஷாராக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.