பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு கொண்டுவந்துள்ளேன் - பிரதமர் மோடி
|10வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு கொண்டுவந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பரூச்,
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பரூச்சில் அமைய உள்ள நாட்டின் முதல் மொத்த மருந்துப்பொருள் பூங்காவிற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின், நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்திய மக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் கூட்டு முயற்சியால் தான் 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றபோது 10-வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அது மட்டுமல்ல, ஆறாவது இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு சென்றபோது, நாடு ஒரு தனி பெருமையை உணர்ந்தது, ஏனென்றால் ஐந்தாவது இடத்தில் இருப்பவர்கள் 250 ஆண்டுகள் நம்மை ஆண்டவர்கள். நாங்கள் அவர்களின் அடிமைகளாக இருந்தோம், இப்போது எங்கள் இளைஞர்கள் நமது நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதற்காக, இளம் தலைமுறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், சிறு தொழில்துறையினர் என அனைவரும் புகழுக்கு தகுதியானவர்கள். பாஜக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது. இந்திய பொருளாதாரத்தை முதலாவது இடத்திற்கு விரைவில் கொண்டு வருவோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.