< Back
தேசிய செய்திகள்
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளுக்கு இடையே சினிமா கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்
தேசிய செய்திகள்

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளுக்கு இடையே சினிமா கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்

தினத்தந்தி
|
29 Jan 2023 2:53 AM IST

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளுக்கு இடையே சினிமா கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கூறினார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாட்டில், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் மூலம், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் திரைப்பட விழா மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 31-ந்தேதி வரை விழா நடைபெறும். ஷாங்காய் கூட்டுறவு அமைப்பானது கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிதான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதற்கு இந்தியாவின் தலைமைத்துவத்தை நினைவுகூரும் வகையில், இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

விழாவை மத்திய வெளியுறவு மற்றும் கலாசாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி முன்னிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும்போது, "ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளுக்கு இடையே சினிமா கூட்டாண்மையை உருவாக்க வேண்டும். இந்த நாடுகளில் இந்திய திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. நாடுகளுக்கிடையே நம்ப முடியாத வாய்ப்பாக இந்த விழா உள்ளது" என்றார்.

விழாவில் திரை பிரபலங்கள் ஹேமமாலினி, அக்சய்குமார், டைகர் ஷெராப், சஜித் நதியாத்வாலா, ஈஷா குப்தா, பூனம் தில்லான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய அனிமேஷன் தொடரின் முன்னோட்ட காட்சிகள் அப்போது திரையிடப்பட்டன. இந்த விழாவில் 57 படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் 14 படங்கள் போட்டிப்பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்