பெங்களூருவில் நிறுவனம் தொடங்க அனுமதி கிடைக்கவில்லை; அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபர் வேதனை
|௨ மாதங்களாக முயன்றும் பெங்களூருவில் நிறுவனம் தொடங்க அனுமதி கிடைக்கவில்லை என்று அமெரிக்க வாழ் இந்தியர் வேதனை அடைந்தார். மீண்டும் அவர் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.
பெங்களூரு:
அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபரான பிரிஜ் சிங் என்பவர், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தியாவில் அவர் புதிய நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். இதற்காக அவர் பெங்களூருவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்தார்.
பெங்களூருவில் தன்னுடைய புதிய நிறுவனத்தை தொடங்குவதற்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 'எனக்கு பெங்களூரு மிகவும் பிடிக்கும். கடந்த 3 மாதங்களாக பெங்களூருவில் எனது புதிய நிறுவனத்தை தொடங்க முயற்சி செய்தேன்.
2 மாதத்திற்கும் மேலாக நிறுவனத்தை பதிவு செய்ய முயற்சி செய்தும் அனுமதி கிடைக்கவில்லை. பணிகள் முடியாத நிலையில் வேதனையுடன் மீண்டும் அமெரிக்காவுக்கு கனத்த இதயத்துடன் புறப்படுகிறேன்' என்று கூறி இருந்தார். அவரது இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.