இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவு அறிமுகம்
|50 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய ராணுவ வீரர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, அன்றாட உணவில் சிறுதானிய உணவு சேர்க்கப்பட்டு வந்தது. பின்னர், கோதுமை மாவுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில், சிறுதானியங்கள் நிறுத்தப்பட்டன.
இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. எனவே, பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தானிய பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்திய ராணுவ வீரர்களுக்கு மீண்டும் சிறுதானிய மாவை அறிமுகம் செய்ய இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கம்பு, சோளம், கேழ்வரகு ஆகிய 3 சிறுதானியங்கள், வீரர்களின் முன்னுரிமைக்கு ஏற்ப அளிக்கப்படும். ராணுவ வீரர்கள் எதை விரும்புகிறார்களோ, அந்த சிறுதானியம் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும்.
2023-2024 நிதிஆண்டில் இருந்து ராணுவ வீரர்களின் அரிசி, கோதுமை மாவு ஒதுக்கீட்டில் 25 சதவீதத்துக்கு மிகாமல் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.
சிறுதானியங்களில் புரதச்சத்து அதிகம் இருப்பதும், நுண் ஊட்டச்சத்துகள் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது புவியியல் சூழ்நிலைக்கும், சீதோஷ்ணநிலைக்கும் பொருத்தமானது.
வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ராணுவ வீரர்களின் மனஉறுதியை அதிகரிக்கும். அனைத்து மட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் அன்றாட உணவில் சிறுதானியங்கள் இடம்பெறும்.
ராணுவ நிகழ்ச்சிகள், ராணுவ உணவகங்கள், வீட்டு சமையல் ஆகியவற்றில் சிறுதானியங்களை பரவலாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவையான சிறுதானிய உணவுகள் சமைக்க சமையல் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வடக்கு எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப்பொருட்களை வழங்க சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ கேன்டீன்களிலும் சிறுதானியங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.