மணிப்பூர்: விடுப்பில் சென்ற இந்திய ராணுவ வீரர் கடத்தப்பட்டு சுட்டுக் கொலை
|மணிப்பூரில் விடுப்பில் சென்ற இந்திய ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இம்பால் மேற்கு (மணிப்பூர்),
இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் விடுப்பில் சென்ற இந்திய ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் செர்டோ தாங்தாங் கோம் (41). விடுப்பில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த அவரை சனிக்கிழமை காலை 10 மணியளவில், வீட்டின் தாழ்வாரத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் அவரின் தலையில் துப்பாக்கியை வைத்து வெள்ளை நிற வாகனத்தில் கடத்திச் சென்றனர். இதை அவரது பத்து வயது மகன் பார்த்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இம்பால் கிழக்கில் உள்ள குனிங்தேக் கிராமத்தில் ராணுவ வீரர் செர்டோ தாங்தாங் கோம் தலையில் குண்டு காயங்களுடன் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கொல்லப்பட்ட ராணுவ வீரர் தாங்தாங் கோமுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.