< Back
தேசிய செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லும் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நம்பிக்கை
தேசிய செய்திகள்

'ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லும்' - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நம்பிக்கை

தினத்தந்தி
|
9 Jun 2023 5:43 AM IST

ஆசிய விளையாட்டில் இந்தியா மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி, கிரிக்கெட், பேட்மிண்டன், செஸ், வில்வித்தை, நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் உள்பட 40 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது. இந்தியாவில் இருந்து இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 600 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழு இந்த போட்டிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டி குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேற்று அளித்த பேட்டியில், 'உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதி வாய்ப்புகளை மத்திய அரசு மேம்படுத்தியதன் விளைவு கடந்த ஒலிம்பிக், பாராஒலிம்பிக், காதுகேளாதோருக்கான ஒலிம்பிக், காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா மிகச்சிறந்த முடிவுகளை பெற்றது. நாம் அதிகமான பதக்கங்களை வென்று சாதனை படைத்தோம்.

இதே போல் ஆசிய விளையாட்டிலும் சாதிப்போம். முன்பு எப்போதையும் விட இந்த தடவை ஆசிய விளையாட்டில் இந்தியா மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று நினைக்கிறேன். ஆசிய விளையாட்டுக்கு தயாராகுவதற்கு மத்திய அரசு இதுவரை ரூ.220 கோடி வழங்கி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.450 கோடி ஒதுக்கியுள்ளது' என்றார். 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கம் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்