யார் பிரதமராக இருந்தாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: ப. சிதம்பரம்
|ஜி.டி.பி. அடிப்படையில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவது தவிர்க்க முடியாதது என்று ப.சிதம்பரம் கூறினார்.
கொல்கத்தா,
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன. ஜெர்மனியும், இந்தியாவும் சமமான போட்டியில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியாவில் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன் என பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.
ஆனால் யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா 3-வது இடத்தை எட்டும் என முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி மிகைப்படுத்தலில் வல்லவர். எண்கணித அடிப்படையில் தவிர்க்க முடியாத ஒன்றை அவர் உத்தரவாதமாக மாற்றுகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) அடிப்படையில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவது தவிர்க்க முடியாதது.
கடந்த 2004-ல் இந்தியாவின் ஜி.டி.பி. 12-வது இடத்தில் இருந்தது. 2014-ல் அது 7-வது இடத்தை அடைந்தது. 2024-ல் 5-வது இடத்துக்கு வந்துள்ளது.
எனவே யார் பிரதமராக இருந்தாலும் இந்தியாவின் ஜி.டிபி. உலக அளவில் 3-வது இடத்துக்கு உயரும். இதில் எந்த மந்திரமும் இல்லை. நமது மக்கள் தொகையை பொறுத்தவரை இது எண்கணித அடிப்படையிலான தவிர்க்க முடியாதது.
ஒரு நாட்டின் ஜி.டி.பி.யின் அளவு என்பது அந்நாட்டு மக்களின் வளர்ச்சியின் உண்மையான அளவாக இருக்காது. தனிநபர் வருமானம்தான் வளர்ச்சிக்கான மிகவும் துல்லியமான குறிகாட்டியாக இருக்கும்.
இதில் இந்தியா உலக அளவில் பின்தங்கி இருக்கிறது. சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டின்படி தனிநபர் வருமானத்தில் இந்தியா 136-வது இடத்தில் இருக்கிறது.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்ப்பதுடன், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. எனவேதான் அது குறித்து தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.
காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை நீக்கியது குறித்த வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி விட்டது. அதை நாங்கள் ஏற்றாலும், மறுத்தாலும் அது சட்டமாகி விட்டது. அதேநேரம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்து இருக்கிறோம்" என்று ப.சிதம்பரம் கூறினார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாரிசுரிமை வரி விதிக்கப்படும் எனவும், சொத்து மறுவினியோகம் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி கூறிவருவதை ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "மதிப்புக்குரிய பிரதமர் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை வாசித்து, அதில் இல்லாததை கண்டு பிடித்து வருகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாரிசுரிமை வரி குறித்து எங்கேயும் குறிப்பிடவில்லை. வரி விதிப்பில் கட்சியின் வாக்குறுதிகள் தெளிவாக உள்ளன. நேரடி வரிவிதிப்பில் வெளிப்படைத்தன்மை, சமமான, தெளிவான, பாகுபாடற்ற வரி நிர்வாகத்தை வாக்குறுதி அளித்து இருக்கிறோம்.
5 வருட காலத்திற்கு நிலையான தனிநபர் வருமான வரி விகிதங்களை பராமரித்தல்; சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகள் மீதான வரிச்சுமையை குறைத்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
மோடி அரசின் செஸ் வரிக்கு முடிவு கட்டுவதுடன் சில்லறை வணிகர்களுக்கு குறிப்பிடத்தக்க வரி நிவாரணம் மற்றும் ஜி.எஸ்.டி. 2.0 அறிமுகம் போன்றவை கொண்டு வரப்படும்.
மதிப்புக்குரிய பிரதமர் கற்பனை பேய்களுடன் சண்டையிடுவதை பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மையான பிரச்சினைகள் குறித்து அவர் விவாதிக்க வேண்டும்" என்று அதில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.