2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - பிரதமர் மோடி
|2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது தேசிய வாழ்க்கையில், ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
சிறப்பு பேட்டி
டெல்லியில் ஜி-20 மாநாடு, இந்த வாரம் நடக்கும்நிலையில், பிரதமர் மோடி ஜி-20 மாநாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்க தொடங்கியதில் இருந்து சாதகமான பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் சில தாக்கங்கள், எனது இதயத்துக்கு நெருக்கமானவை.
இந்தியா, 100 கோடிக்கு மேற்பட்ட பசித்த வயிறுகளை கொண்ட நாடு என்று நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 100 கோடி லட்சிய மனங்களையும், 200 கோடிக்கு மேற்பட்ட திறமையான கைகளையும், கோடிக்கணக்கான இளைஞர்களையும் கொண்ட நாடு என்று பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் 5-வது இடம்
நீண்ட காலமாக பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியா திகழ்ந்து வந்தது. காலனி ஆதிக்கத்தால் இந்தியாவின் உலகளாவிய தாக்கம் குறைந்தது. தற்போது இந்தியா மீண்டும் எழுந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்குள் ஒரே தாவலில் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள்.
2047-ம் ஆண்டு வரையிலான காலம், மாபெரும் வாய்ப்புகளுக்கான காலம். இந்த சகாப்தத்தில் வாழும் இந்தியர்கள், வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதன் தாக்கம், அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கும்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு 30 ஆண்டுகளாக இந்தியாவில் நிலையற்ற அரசுகளே இருந்தன. அதனால் அவற்றால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக மக்கள் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். அந்த நிலைத்தன்மை காரணமாக, பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தியாவின் வளர்ச்சி கதையை உலகம் உன்னிப்பாக பார்த்து வருகிறது.
வளர்ந்த நாடு
இந்தியாவின் விண்வெளி சாதனையை உலகமே கொண்டாடுகிறது. சர்வதேச விளையாட்டுகளில் முந்தைய சாதனைகளை இந்தியா முறியடித்து வருகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள், உலக தரவரிசையில் முன்னேறி வருகின்றன. இந்த வேகத்தால், மிக விரைவில் பொருளாதாரத்தில் 3-வது இடத்தை இந்தியா எட்டும். 2047-ம் ஆண்டுக்குள், வளர்ந்த நாடுகளில் ஒன்றாக மாறும். வளர்ந்த நாடாக, சுகாதாரம், கல்வி, சமூக துறைகளின் வெளிப்பாடு, உலகிலேயே சிறந்ததாக இருக்கும்.
நமது தேசிய வாழ்க்கையில் ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமே இருக்காது. இந்திய மக்களின் வாழ்க்கை தரம், உலகின் சிறந்த நாடுகளுக்கு இணையாக இருக்கும். பணவீக்கம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதுதொடர்பாக ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினோம். ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடன் பிரச்சினை
20-வது நூற்றாண்டு அணுகுமுறை, 21-ம் நூற்றாண்டுக்கு பொருந்தாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளுமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது. சூரியசக்தி கூட்டணி அமைத்ததை தொடர்ந்து, ஜி-20 நாடுகளிடையே உயிரி எரிபொருள் கூட்டணி அமைப்பது அவசியம்.
ஆப்பிரிக்காவுக்கு இந்தியா உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்க இந்தியா குரல் கொடுத்து வருகிறது. பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட வேண்டியது அவசியம். அதற்கான அணுகுமுறையை மாற்ற வேண்டும்.
வளரும் நாடுகளுக்கு கடன் பிரச்சினை பெரும் கவலை அளிக்கக்கூடிய விஷயம். எனவே, ஜி-20 நாடுகள் மாநாட்டில், ஏழை நாடுகள் கடன் சுமையில் இருந்து விடுபட உதவுவதற்கு வழி காணப்படும். அண்டை நாடான இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது உதவினோம்.
பயங்கரவாதம்
உள்நாட்டு உற்பத்தியை மையமாக கொண்ட வளர்ச்சி அணுகுமுறையில் இருந்து மனிதர்களை மையமாக கொண்ட வளர்ச்சி அணுகுமுறைக்கு மாற வேண்டும்.
பயங்கரவாத இயக்கங்கள், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயங்கரவாதத்தை வளர்க்கின்றன. எனவே, இணையதள குற்றங்களை தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.