< Back
தேசிய செய்திகள்
இந்தியா ஒருபோதும் இந்து நாடாக இருந்ததில்லை - மோகன் பகவத்துக்கு சமாஜ்வாடி மூத்த தலைவர் பதிலடி
தேசிய செய்திகள்

'இந்தியா ஒருபோதும் இந்து நாடாக இருந்ததில்லை' - மோகன் பகவத்துக்கு சமாஜ்வாடி மூத்த தலைவர் பதிலடி

தினத்தந்தி
|
3 Sept 2023 4:45 AM IST

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது என்று சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், "இந்தியா ஓர் இந்து தேசம். கருத்தியல் ரீதியாக, அனைத்து இந்தியர்களும் இந்துக்கள். அதே போல் அனைத்து இந்துக்களும் பாரதத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்று இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்து கலாச்சாரம், இந்து முன்னோர்கள் மற்றும் இந்து நிலத்துடன் தொடர்புடையவர்கள். சிலர் இதை புரிந்துகொண்டாலும், தங்கள் பழக்கவழக்கங்களாலும், சுயநலத்தாலும் புரிந்துகொண்ட பிறகும் அதைச் செயல்படுத்துவதில்லை. மேலும், சிலர் இதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அல்லது மறந்துவிட்டார்கள்" என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"இந்தியா ஒரு இந்து தேசம் அல்ல. கடந்த காலத்தில் ஒருபோதும் அது இந்து நாடாக இருந்ததில்லை. இந்தியா இறையாண்மை உள்ள நாடு. நமது அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது. இந்திய மக்கள் அனைவரும் இந்தியர்கள். நமது இந்திய அரசியலமைப்பு அனைத்து மதங்கள், பிரிவுகள் மற்றும் கலாச்சாரங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது."

இவ்வாறு சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்