< Back
தேசிய செய்திகள்
இந்தியாவிலிருந்து 98 நாடுகளுக்கு 23.50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வினியோகம்
தேசிய செய்திகள்

இந்தியாவிலிருந்து 98 நாடுகளுக்கு 23.50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வினியோகம்

தினத்தந்தி
|
15 July 2022 2:39 PM IST

தடுப்பூசி 'மைத்ரி' முயற்சியின் கீழ், 98 நாடுகளுக்கு 23.50 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி வினியோகம் பற்றிய கேள்விக்கு நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் சுமன் கே பெர்ரி பதில் கூறினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ள உலகின் மிக விரிவான இலவச தடுப்பூசி திட்டம் மூலம், 198 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் தொலைதூர பகுதிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைகிறது.

தடுப்பூசி 'மைத்ரி' முன்முயற்சியின் கீழ், உலகின் 98 நாடுகளுக்கு மொத்தம் 23.50 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது என்று கூறினார்.

"தடுப்பூசி மைத்ரி (தடுப்பூசி நட்பு)" என்ற முன்முயற்சியை ஜனவரி 2021இல் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை, உலகளவில் குறைந்த வருமானம் மற்றும் வளரும் நாடுகளுக்கு பரிசளிப்பதற்கும் வழங்குவதற்கும் ஒரு பெரிய ராஜங்க முயற்சியாகும்.

வங்காளதேசம், மியான்மர், நேபாளம், பூடான், மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை, பிரேசில், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, காங்கோ, நைஜீரியா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் தடுப்பூசி மைத்ரி முயற்சியின் மூலம் பயனடைந்துள்ளன.

மத்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள தகவல்படி, மொத்தம் 23.50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் 98 நாடுகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளுடன் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள், பாதுகாப்பு கவசங்கள், தெர்மோ மீட்டர்கள், சிரிஞ்சிகள், சோதனை கருவிகள் உள்ளிட்டவை 65 நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்