< Back
தேசிய செய்திகள்
Rudra missile test india
தேசிய செய்திகள்

போர் விமானத்தில் இருந்து பாய்ந்து இலக்கை தாக்கியது.. இந்தியாவின் ருத்ரா ஏவுகணை சோதனை வெற்றி

தினத்தந்தி
|
29 May 2024 2:10 PM GMT

ருத்ரா ஏவுகணை சோதனையானது, அனைத்து சோதனை நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. ஏவுகணைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்படுகிறது.

அவ்வகையில், ஆகாயத்தில் இருந்து பூமியில் உள்ள இலக்கை தாக்கும் ருத்ரா ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் எஸ்.யு.-30 போர் விமானத்தில் இருந்து பூமியை நோக்கி செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்ரா எம்-II என்ற இந்த ஏவுகணை சோதனையானது, அனைத்து சோதனை நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட உந்து சக்தி கொண்ட ஏவுகணையாகும். இது பல்வேறு வகையான எதிரிகளின் இலக்குகளை அழிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ருத்ராஎம்-II ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக டி.ஆர்.டி.ஓ., விமானப்படையினருக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். இந்த சோதனையானது, ஆயுதப் படைகளுக்கு கூடுதல் வலிமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்