அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி
|ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
பாலசோர்,
நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை பல்வேறு நிலைகளில் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் "அக்னி-பிரைம்' என்ற புதிய தலைமுறை ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. நேற்றிரவு 7 மணிக்கு சோதனை செய்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள பல சென்சார்களால் பெறப்பட்ட தரவுகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டபடி, சோதனை அதன் நம்பகமான செயல்திறனை சரிபார்க்கும் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டிஆர்டிஓ) இணைந்து வியூக படை கட்டளை (எஸ்எப்சி) இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.