நாட்டிலேயே சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்: வெளியான அதிர்ச்சி தகவல்
|இந்தியாவில் 2022-ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தனி நபர் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் ஆகும். வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துக்கள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 11 சதவீதம் முந்தைய ஆண்டை விட விபத்து எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2022-ம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதி மீறல்களே இந்த விபத்துக்களுக்கு பெரும்பாலும் காரணமாக அமைந்துள்ளது.
சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துள்ளது. 2022-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளாவும், நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேசமும் உள்ளன