ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
|உலகிலேயே ஊழல் மிகவும் குறைந்த நாடாக டென்மார்க் நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த காரணிகளின் அடிப்படையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. பூஜ்ய (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 180 நாடுகளில் எந்த நாடும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. அதாவது உலகம் முழுவதும் ஊழல் இருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதேபோல் கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133-வது இடத்தையும், இலங்கை 115-வது இடத்தையும் சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா நாடு கடைசி இடத்தில் உள்ளது.