< Back
தேசிய செய்திகள்
யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மர் நாட்டுக்கு இந்தியா நிவாரண உதவி
தேசிய செய்திகள்

யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மர் நாட்டுக்கு இந்தியா நிவாரண உதவி

தினத்தந்தி
|
16 Sept 2024 2:06 AM IST

யாகி சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு 10 டன் அளவிலான ரேசன் பொருட்கள், துணிகள் மற்றும் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி வைத்து உள்ளது.

புதுடெல்லி,

தென்சீன கடலில் உருவான யாகி சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. இதில் சிக்கி மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால், மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு சென்றது. யாகி சூறாவளி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மியான்மர், வியட்நாம் மற்றும் லாவோஸ் நாடுகளில் யாகி சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆபரேசன் சத்பவ என்ற பெயரில், இந்தியா நிவாரண உதவி பொருட்களை அனுப்பியுள்ளது. இதனை மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.

இதன்படி, 10 டன் அளவிலான ரேசன் பொருட்கள், துணிகள் மற்றும் மருந்து பொருட்களை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சாத்புரா கப்பல் ஏற்றி கொண்டு மியான்மர் நாட்டுக்கு சென்றுள்ளது. வியட்நாம் நாட்டுக்கு 35 டன் அளவிலான உதவி பொருட்களும், லாவோஸ் நாட்டுக்கு 10 டன் அளவிலான உதவி பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

யாகி சூறாவளி புயல் பாதிப்புக்கு மியான்மரில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோரை காணவில்லை அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்