குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி புகழாரம்
|கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
புதுடெல்லி,
'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்தது. இதில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தை இந்திய வீரர் குகேஷ் டிரா செய்ததன் மூலம் கிடைத்த ,5 புள்ளியையும் சேர்த்து, மொத்தம் 9 புள்ளிகள் பெற்றார்.அத்துடன், முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்ட குகேஷ், சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"குகேஷின் சாதனை, அவரது அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.