< Back
தேசிய செய்திகள்
லட்சத்தீவில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டம்?
தேசிய செய்திகள்

லட்சத்தீவில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டம்?

தினத்தந்தி
|
9 Jan 2024 7:01 PM IST

போர் விமானங்கள், ராணுவப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் வணிக விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கூட்டு விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

சமீபத்தில் லட்சத்தீவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கவரட்டியில் சுமார் ரூ.1150 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதுபோன்று நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

அதன்படி, தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி கூறுகையில், லட்சத்தீவின் நிலப்பரப்பளவு சிறியதாக இருந்தாலும், மக்களின் இதயங்கள் கடலைப் போல ஆழமாக உள்ளன. கரையோர தீவுப் பகுதிகள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்படுகிறது. எங்கள் அரசு அவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

யூனியன் பிரதேசத்தை சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என பல்வேறு திட்டங்கள் குறித்தும், லட்சத்தீவு குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

இதனிடையே, லட்சத்தீவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பிரதமர் மோடி இணையத்தில் பகிர்ந்து, சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம் என கூறியிருந்தார்.

இந்த பதிவிற்கு எதிராக மாலத்தீவு மந்திரிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். இதற்கு இந்தியர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து, பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். அதேபோல மாலத்தீவுக்கு செல்ல புக் செய்யப்பட்ட விமான டிக்கெட்களும் ரத்து செய்தனர். அதுமட்டுமில்லாது, மாலத்தீவை புறக்கணிப்போம் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்டானது. இந்த நிலையில், லட்சத்தீவின் தென்கோடியில் உள்ள மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் விமானங்கள், ராணுவப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் வணிக விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கூட்டு விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும், கடந்த காலங்களில் மினிகாய் தீவுகளில் இந்த புதிய விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் அனுப்பப்பட்ட போதிலும், கூட்டுப் பயன்பாட்டு பாதுகாப்பு விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் சமீப காலமாக புத்துயிர் பெற்று, தீவிரமடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கு விமான நிலையம் அமைப்பது மூலம் அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும். சுற்றுலாவை மேம்படுத்த முடியும். தற்போது, லட்சத்தீவின் அகாட்டி தீவில் மட்டும் தான் விமான தளம் உள்ளது. இங்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பயணிகளை கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்