காஷ்மீரில் ஜி-20 உச்சி மாநாடு; பாகிஸ்தானின் எதிர்ப்பால் லடாக்கில் நடத்த திட்டம்!
|லடாக் யூனியன் பிரதேசத்தில், 18வது ஜி20 உச்சிமாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
லடாக் யூனியன் பிரதேசத்தில், 18வது ஜி20 உச்சிமாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக, லடாக்கின் துணைநிலை கவர்னர் ஆர்.கே மாத்தூர், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லடாக்கில் 2023ம் ஆண்டுக்கான ஜி20 தொடர்பான சில நிகழ்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜி20 உச்சி மாநாட்டு நிகழ்வுகள் புதுடெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு உள்ள பிரகதி மைதானத்தை மாற்றியமைத்து அதை மாநாட்டிற்கான இடமாக மாற்றுவதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்தோனேஷியாவின் பாலியில், ஜி 20 வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
முன்னதாக, ஜி 20 உச்சி மாநாட்டை காஷ்மீரில் நடத்துவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அதிருப்தி அளிப்பதால் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியா – சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இப்போது அந்த பகுதியில் கி20 மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பது சீனாவுக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.