கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபடுவோம் மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை - மத்திய அரசு விளக்கம்
|மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதன் இறக்குமதியை கண்காணிக்கும் பணி மட்டுமே நடக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதன் இறக்குமதியை கண்காணிக்கும் பணி மட்டுமே நடக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கணினி, மடிக்கணினி, கையடக்க கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்கள், குறைந்த விலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால், இப்பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கும்வகையில், கணினி, மடிக்கணினி, கையடக்க கணினி, மைக்ரோ கணினி, டேட்டா பிராசசிங் எந்திரங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்தது.
அப்பொருட்களை இறக்குமதி செய்ய உரிமம் பெறும் முறை, நவம்பர் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று கருதப்பட்டது.
அதற்கு இந்திய தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தொழில்துறையினர் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், உரிமம் எதுவும் பெறத்தேவையில்லை என்று மத்திய அரசு நேற்று தெளிவுபடுத்தியது. இதுகுறித்து மத்திய வர்த்தக செயலாளர் சுனில் பார்த்வால் கூறியதாவது:-
மடிக்கணினியை பொறுத்தவரை, அதன் இறக்குமதிக்கு கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. மடிக்கணினியை இறக்குமதி செய்பவர், கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார். அதன்மூலம் அந்த இறக்குமதியை நாங்கள் கண்காணிக்க முடியும்.
இது, அடிப்படையாக நாங்கள் செய்யும் கண்காணிப்புதான். கட்டுப்பாடு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.