< Back
தேசிய செய்திகள்
இந்தியா புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

இந்தியா புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
5 Jun 2022 4:33 PM IST

சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா 5 மாதங்களுக்கு முன்பே அடைந்துள்ளதை எண்ணி அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற 'மண்ணை காப்போம்' என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

மண்ணை காப்பாற்ற அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர், இந்தியாவில் உள்ள காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார். சூரிய ஆற்றல் திறன் 18 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவும் 2030-ம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினார்.

பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா 5 மாதங்களுக்கு முன்பே அடைந்துள்ளது என பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, மண்ணின் ஆரோக்கியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மண்வள அட்டை வழங்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களை நீர் பாதுகாப்பில் இணைத்து வருவதாகவும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே நாட்டில் 13 பெரிய நதிகளைப் பாதுகாக்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க இன்று இந்தியா புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்