உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது: மத்திய மந்திரி பியூஷ் கோயெல்
|இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக வளர்ந்து வருகிறது என மத்திய மந்திரி பியூஷ் கோயெல் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் 41-வது இந்திய சர்வதேச வர்த்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயெல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார்.
இதன் பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயெல், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.
நம்முடைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர்கள், இந்தியாவில் உற்பத்தி செய்பவர்களுக்காக, அர்ப்பணிப்புடன் கூடிய சுதேசி திருவிழா நடத்தப்படும். அதில், உலகத்தின் முன்னால் தரமுள்ள பொருட்களை நாங்கள் அறிமுகம் செய்வோம்.
பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். அதனால், உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் உதவியால் உலக பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். வருங்காலத்தில், உலகையே இந்தியா வழிநடத்தி செல்லும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.