இந்தியா சூப்பர் பவர் நாடாக உள்ளது; ஆப்பிரிக்க யூனியன் தலைவர் புகழாரம்
|சீனாவை விட முன்னேறி சூப்பர் பவர் நாடாக இந்தியா உள்ளது என ஆப்பிரிக்க யூனியன் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் 2 நாட்கள் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில், ஜி-20 உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் இணைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி கமோரோஸ் யூனியன் மற்றும் ஆப்பிரிக்க யூனியனின் தலைவர் அசாலி அசவுமணி இன்று கூறும்போது, உலகில் 5-வது சூப்பர் பவர் நாடாக இந்தியா உள்ளது.
அதனால், இந்தியாவுக்கு ஆப்பிரிக்காவில் போதிய இடம் உள்ளது. விண்வெளிக்கு சென்று அதிக சக்தி படைத்த நாடாக இந்தியா உள்ளது என்பதும் நமக்கு தெரியும். அதனால், நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இந்தியா ஒரு சூப்பர் பவர் நாடாக உள்ளது. சீனாவை விட முன்னேறி உள்ளது என கூறியுள்ளார்.
ஜி-20 உறுப்பினரானது பற்றி அவர் கூறும்போது, நான் அழ இருந்தேன். ஒரு பெரிய அளவில் உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன். ஏனெனில், விவாதம் ஒன்று நடந்து அதன்பின்னர், ஒரு முடிவு எடுக்கப்படும் என நாங்கள் நினைத்தோம்.
ஆனால், உச்சி மாநாட்டின் தொடக்கத்திலேயே, நாங்களும் ஓர் உறுப்பினர் என அறிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். ஜி-20 குடும்பத்தில் ஒன்றாக ஆப்பிரிக்க யூனியன் இணைந்ததும், பிரதமர் மோடி, அவரை கட்டியணைத்து ஆரத்தழுவி கொண்டார். இதற்காக உறுப்பு நாடுகளுக்கு தன்னுடைய நன்றியையும் அசாலி தெரிவித்து கொண்டார்.