< Back
தேசிய செய்திகள்
உக்ரைனுக்கு எதிரான போர்: ரஷியா சார்பில் போரிடும் இந்தியர்களை விரைவில் மீட்க நடவடிக்கை - மத்திய அரசு உறுதி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான போர்: ரஷியா சார்பில் போரிடும் இந்தியர்களை விரைவில் மீட்க நடவடிக்கை - மத்திய அரசு உறுதி

தினத்தந்தி
|
24 Feb 2024 9:56 AM IST

இந்தியர்கள் சிலர் ரஷிய ராணுவத்தில் பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவ வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ரஷியா வெளிநாடுகளில் இருந்து தனது ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த சூழலில் இந்தியர்கள் பலர் ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக பணியாற்றி வருவதாகவும், அவர்கள் போர் முனையில் ரஷிய வீரர்களுடன் இணைந்து சண்டையிட கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து கூறுகையில், "இந்தியர்கள் சிலர் ரஷிய ராணுவத்தில் துணை பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அவர்களை விரைவில் அங்கிருந்து மீட்க ரஷிய அதிகாரிகளிடம் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஷியாவில் உள்ள இந்தியர்கள் உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.

முன்னதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவரும், எம்பி.யுமான அசாதுதீன் ஓவைசி இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்