'அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான வழி இந்தியாவிடம் உள்ளது' - மோகன் பகவத்
|அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான வழி இந்தியாவிடம் உள்ளது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்தியாவின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் ஆழமாக பதிந்துள்ள மகிழ்ச்சியையும் அமைதியையும், கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனை முயற்சிகளால் வழங்க முடியவில்லை. கொரோனாவுக்குப் பிறகு, அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான வழி இந்தியாவிடம் உள்ளது என்பதை உலகம் அறிந்தது.
சனாதன சிந்தனையும், தர்மமும் அரண்மனைகளில் இருந்து வந்தவை அல்ல. மாறாக ஆசிரமங்கள் மற்றும் காடுகளில் இருந்து வந்தவை. மாறும் காலத்துக்கு ஏற்ப நமது உடைகள் மாறலாம், ஆனால் நமது இயல்பு மாறாது. தங்கள் இயல்பை பேணிக்காப்பவர்களே வளர்ச்சியடைந்தவர்களாக கருதப்படுவார்கள்.
பழங்குடியினர் பாரம்பரியமாக வாழும் வனப்பகுதிகளில், பெரிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் இல்லாத அமைதியும், எளிமையும் இருக்கிறது. என்னால் கண்களை மூடிக்கொண்டு கிராமவாசிகளை நம்ப முடியும். ஆனால் நகரங்களில், நாம் யாருடன் பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் உழைக்கிறார்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
நம்மிடம் 33 கோடி தெய்வங்கள் இருப்பதாலும், நம் நாட்டில் 3,800-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாலும், உணவுப் பழக்கவழக்கங்களில் கூட வித்தியாசங்கள் இருப்பதாலும் நாம் வெவ்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளோம். வித்தியாசங்கள் இருந்தாலும், நம் மனம் ஒன்றுதான். இதை மற்ற நாடுகளில் காண முடியாது.
நாம் பிறருடைய முன்னேற்றத்திற்காக உழைக்கும்போது, நமக்கும் வளர்ச்சி ஏற்படுகிறது. மனிதர்கள் தனியாக வாழ்வதில்லை. ஒரு மனிதனை மூடிய அறையில் தனியாக வாழ வைத்தால், சில மாதங்களில் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்தால் அவர்களது உணர்வுகள் இணைந்திருக்கும்."
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.