கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தால் வளர்ச்சியைக் காணலாம் என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது - பிரதமர் மோடி
|முழு உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கொள்கைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்போது, நல்ல நிர்வாகம் உறுதிப்படுத்தப்படும்போது, பொருளாதாரக் கொள்கையின் அடித்தளத்தை ஒரு தேசமும், தேசத்தின் மக்களும் உருவாக்கும்போது என்ன விளைவுகளை அடைய முடியும் என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் 7.7 சதவீதமாக முன்னேறியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) இந்தியாவில் முதலீட்டுக்கு ஏற்ற சூழல் இருப்பதாக கூறியது. இன்று முழு உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது.
இதற்குக் காரணம், இந்தியாவின் வலுவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும், கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் ஆகும். இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை மாற்றம். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, இதனை குறைத்து மதிப்பிடவில்லை."
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.