செல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்
|இறக்குமதி வரி குறைப்பால் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழில் வலுவடையும் என்று மத்திய தொலைத்தொடர்பு மந்திரி கூறினார்.
புதுடெல்லி,
செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பேட்டரி கவர், முன்பக்க, நடுப்பக்க, பின்பக்க கவர், மெயின் லென்ஸ், ஸ்க்ரு, சிம் சாக்கெட் ஆகியவற்றுக்கு 15 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வரியை 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பாணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டு செல்போன் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் பெருக்கவும், இந்திய சந்தையில் செல்போன் விலையை கட்டுப்படுத்தவும் இந்த வரிகுறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இறக்குமதி வரி குறைப்பால் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழில் வலுவடையும். இந்த தொழிலுக்கு நிச்சயத்தன்மையையும், தெளிவையும் கொண்டு வரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.