< Back
தேசிய செய்திகள்
இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு திடீரென வந்த கபில் சிபல்.. அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைவர்கள்
தேசிய செய்திகள்

இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு திடீரென வந்த கபில் சிபல்.. அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைவர்கள்

தினத்தந்தி
|
1 Sept 2023 5:33 PM IST

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்தபோது அதில் கபில் சிபலும் இடம்பெற்றிருந்தார்.

மும்பை:

மும்பையில் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தின்போது இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட 13 பேர் இடம் பெற்றுள்ளனர். கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய மூத்த தலைவர் கபில் சிபல், இன்று காலையில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்ட அரங்கிற்கு வந்தார். அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லாத நிலையில் எதிர்பாராத வகையில் அவர் வந்ததால், காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, கபில் சிபல் வருகை குறித்து கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள உத்தவ் தாக்கரேயிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

அப்போது பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தலையிட்டு வேணுகோபாலிடம் எடுத்துக் கூறினர். இப்போது எதிர்க்கட்சிகள் இணைவதுதான் நமக்கு முக்கியம் என்றும், கபில் சிபல் வருகையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினர். அதேசமயம், ராகுல்காந்தி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.

அதன்பின்னர் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்தபோது அதில் கபில் சிபலும் இடம்பெற்றிருந்தார்.

கபில் சிபல் வருகையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிடிஐ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், கபில் சிபலை தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே உற்சாகமாக வரவேற்று அழைத்து செல்வது பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்