லடாக் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய - சீன படைகள் விலகல்!
|இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 12ம் தேதியுடன் படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இரு நாட்டு ராணுவமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இரு நாடுகளும், எல்லையில் படைகளை குவித்தன. இதனால், லடாக் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவிவந்தது.
இந்நிலையில், 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையில் யுத்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா, சீனா படைகள் தங்களது ராணுவத்தினரை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படை விலகல் பணிகள் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உருவாக்கப்பட்ட அனைத்து தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் பிற தொடர்புடைய உள்கட்டமைப்புகள் அகற்றப்படும், அதனை இருதரப்பும் உறுதி செய்யும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.