'லடாக் எல்லையில் ஒரு பிரச்சினை தீர்ந்தது' - ஜெய்சங்கர் நம்பிக்கை
|கோக்ரா படை விலக்கல் மூலம் லடாக் எல்லையில் ஒரு பிரச்சினை தீர்ந்தது என்று வெளியுறவு மந்திரிஜெய்சங்கர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக விளங்கிய கோக்ரா-ஹாட்ஸ்பிரிங் பகுதியின் 15-வது கண்காணிப்பு முனையில் இருந்து இந்தியாவும்-சீனாவும் படைகளை விலக்கிக்கொண்டன. இதை இரு நாட்டு கூட்டு ஆய்வுக்குழுவும் உறுதி செய்துள்ளன.
இதைத்தொடர்ந்து அங்கு ஒரு பிரச்சினை தீர்ந்து விட்டதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை வெளியிட்டார். டெல்லியில் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி கேதரின் கோலன்னாவை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது இதை அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'கோக்ராவில் 15-வது கண்காணிப்பு முனையில் இருந்து படைகள் விலக்கப்பட்டதை உறுதி செய்வதை தவிர வேறு புதிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அங்கு படை வாபஸ் முடிந்து விட்டது. இதன் மூலம் எல்லையில் ஒரு பிரச்சினை முடிவுற்று இருக்கிறது' என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பட்டியலிடுவதில் சீனாவின் முட்டுக்கட்டையையும் அவர் மறைமுகமாக சாடினார்.