உக்ரைன் பிரச்சினைக்கு இந்தியாவால் தீர்வு காண முடியும் - பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை
|உக்ரைன் பிரச்சினைக்கு மோடி தலைமையிலான இந்தியாவால் தீர்வு காண முடியும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இம்மானுவேல் மேக்ரான் கூறியதாவது:-
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எழுந்துள்ள கடினமான சூழலில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் வெற்றி பெற நாங்கள் உழைத்து வருகிறோம். உங்கள் (பிரதமர் ேமாடி) தலைமையின் கீழ் இந்தியா, முழு உலகையும் அணிதிரட்டக்கூடிய ஒன்றாக இருக்க முடியும். அத்துடன் நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்சினையை (உக்ரைன் விவகாரம்) தீர்க்க நமக்கு உதவ முடியும்.
250 விமானங்கள்
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியாவின் ஒப்பந்தமானது, இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஆழமான உறவு மற்றும் நட்பில் விளைந்த மைல்கல் சாதனைகளில் ஒன்றாகும்.
ஏர்பஸ் மற்றும் சப்ரான் உட்பட அதன் பங்காளிகள் அனைத்தும், இந்தியாவுடன் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் இருப்பதையும், விண்வெளி முதல் சைபர் வரை, பாதுகாப்பு முதல் கலாசாரம் வரை, ஆரோக்கியம் முதல் ஆற்றல் மாற்றம் வரை பல துறைகளில் இந்தியாவுடன் நாங்கள் சாதித்துள்ளோம் என்பதையும் இந்த சாதனை காட்டுகிறது.
வரலாற்று வாய்ப்பு
இந்தியா மற்றும் இந்திய மக்களின் திறனை கருத்தில் கொண்டு இன்னும் அதிகமாகச் செல்வதற்கான வரலாற்று வாய்ப்பு நமக்கு இப்போது கிடைத்துள்ளது.
இந்தியாவிற்கு அதிநவீன மற்றும் மிகவும் திறமையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், இந்தியாவில் தயாரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பிரான்சிடம் ஆழமான உறுதிப்பாடு உள்ளது. பிரெஞ்சு தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பதில் எங்கள் அரசு முழு ஆற்றலையும் செலுத்தியுள்ளது. அத்துடன் அணுசக்தி, மைக்ரோசிப்ஸ், சைபர் மற்றும் பயோடெக் ஆகிய துறைகளில் ஒரு புதிய லட்சியத்தை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.