எதிா்க்கட்சி கூட்டணியில் உள்ள தி.மு.க., சனாதன தர்மம் மீது தாக்குதல் நடத்துகிறது - பா.ஜனதா தலைவர் நட்டா
|சனாதன தர்மத்துக்கு எதிராக விஷத்தை பரப்பி வரும் அந்த கூட்டணியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் நட்டா பேசினார்.
மத்தியபிரதேசத்தின் சித்ரகூட் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா.ஜனதா தலைவர் நட்டா கண்டனம் தெரிவித்தார். நட்டா பேசியதாவது:-
எதிா்க்கட்சி கூட்டணியில் உள்ள தி.மு.க., சனாதன தர்மம் மீது தாக்குதல் நடத்துகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். சனாதன தர்மத்தை கொரோனாவுடனும், மலேரியாவுடனும் ஒப்பிட்டுள்ளார். எனவே, சனாதன தர்மத்துக்கு எதிராக விஷத்தை பரப்பி வரும் அந்த கூட்டணியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனுராக் தாக்குர்
மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஆணவ கூட்டணி, சனாதன தர்மத்தை தவறாக புரிந்து வைத்துள்ளது. பாரதத்தின் ஆன்மா, சனாதன தர்மம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முகலாயர்கள் கூட அதை அழிக்க முடியவில்லை.
தி.மு.க.வோ, பிற எதிர்க்கட்சியோ சனாதன தர்மத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக வெறுப்பை பரப்பி வருவது ஆச்சரியம் இல்லை. பல்லாண்டுகளாக நாட்டை இணைத்து வருவது சனாதன தர்மம்தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சுதன்சு திரிவேதி கூறியதாவது:-
சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய செயல்திட்டம் என்பது தெளிவாகி விட்டது. இது ஒரு வெறுப்பு பேச்சு. சுப்ரீம் கோர்ட்டு இதை கவனத்தில் கொண்டு, உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.