< Back
தேசிய செய்திகள்
காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி இந்தியா கூட்டணி சார்பில் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் - நிதிஷ்குமார் அறிவிப்பு
தேசிய செய்திகள்

காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி இந்தியா கூட்டணி சார்பில் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் - நிதிஷ்குமார் அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Sept 2023 9:55 PM IST

காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி நாடு முழுவதும் இந்தியா கூட்டணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என நிதிஷ்குமார் அறிவித்து உள்ளார்.

இந்தியா கூட்டணி

மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள் தங்கள் செயல் திட்டங்களை மும்முரமாக வகுத்து வருகின்றன. பாட்னா, பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்து சந்தித்து 3 ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ள இந்த கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை இணைந்து சந்திப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த இந்த கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர்களில் ஒருவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

பா.ஜனதாவுக்கு பீதி

இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

காந்தி ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட இந்தியா கூட்டணி கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதையொட்டி நாடு முழுவதும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும். மத்தியில் ஆளும் பாஜனதாவுக்கு இந்தியா கூட்டணியின் ஒற்றுமை பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலைகளை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு

இதைப்போல இந்த மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தவும் மத்திய அரசை தள்ளி இருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி நிரலை அரசு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதையே இந்த சிறப்பு அமர்வு காட்டுகிறது.

மத்திய அரசு இதுவரை மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்கவில்லை. ஆனால் அது நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசுக்கு எல்லா விஷயங்களுக்கும் நேரம் இருக்கிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நேரம் இல்லை.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

எனவே சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தை நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் நாங்கள் எழுப்புவோம். இதைப்போல ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தையும் கிளப்புவோம்.

இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி சார்பில் காந்தி ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட இருப்பதாக கூறிய நிதிஷ்குமார், அதில் இடம்பெறும் நிகழ்வுகள் குறித்து எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்