< Back
தேசிய செய்திகள்
லிஸ்ட் தயார்:  சில தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறது இந்தியா கூட்டணி.!
தேசிய செய்திகள்

லிஸ்ட் தயார்: சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறது இந்தியா கூட்டணி.!

தினத்தந்தி
|
14 Sept 2023 3:52 PM IST

இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.

'இந்தியா' என்று பெயரிடப்பட்ட இக்கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது கூட்டம் நேற்று நடந்தது. டெல்லியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இக்கூட்டம் நடந்தது. 14 உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாநிலவாரியாக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடத்தப்பட்டது.

மராட்டியம், தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களில் பொது வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இருக்காது என்று இந்தியா கூட்டணி கருதுகிறது. ஆனால், டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் பொது வேட்பாளர் தேர்வில் சிக்கல் எழும் என்று நினைக்கிறது.

இதுதவிர, கூட்டணியின் பிரசார உத்தி பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. எந்தெந்த நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாகவும், எந்தெந்த தொலைக்காட்சிகள் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத்தின் ஒரு பிரிவினர் தொடர்ந்து விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, அவரின் நடைபயணம் மிகக்குறைந்த அளவிலேயே காட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டது.

காங்கிரஸ் தங்களது செய்தி தொடர்பாளர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து மீடியா சேனல்கள் மற்றும் எடிட்டர்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக யாரையும் அழைக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்