ராஜஸ்தானில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்றோடு நிறைவு
|ராஜஸ்தானில் நடைபெற்று வந்த கூட்டு ராணுவ பயிற்சி, டிசம்பர் 11-ந்தேதி(இன்று) நிறைவு பெறுகிறது.
ஜெய்ப்பூர்,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்கள் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியை நடத்தி வருகின்றன. 'ஆஸ்திரா ஹிந்த்' எனப்படும் இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி ராஜஸ்தானில் கடந்த நவம்பர் 28-ந்தேதி தொடங்கியது.
இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் 2-வது மண்டலத்தின் 13-வது படைப்பிரிவு வீரர்கள் ராஜஸ்தான் வந்தனர். இந்தியா சார்பில் டோக்ரா படைப்பிரிவு வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். இரு படைகளின் அனைத்து ஆயுதங்கள் மற்றும் பிரிவுகள் பங்கேற்கும் முதல் கூட்டுப்பயிற்சி இது ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
இருதரப்பு ராணுவத்திற்கும் இடையே நேர்மறையான ராணுவ உறவுகளை உருவாக்குதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை உள்வாங்குதல் மற்றும் ஒன்றாக செயல்படும் திறனை மேம்படுத்துதலே இந்த பயிற்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின் போது இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் டிரோன்களின் செயல்பாடுகள் குறித்து ஆஸ்திரேலியே ராணுவத்தினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்களத்தில் நடைபெற்று வந்த இந்த கூட்டுப் பயிற்சி, டிசம்பர் 11-ந்தேதி(இன்று) நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.