புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு படகு சேவை: அடுத்த மாதம் தொடங்குகிறது
|புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் படகு போக்குவரத்து தொடங்குகிறது.
கொழும்பு,
புதுச்சேரியில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறைக்கு படகு போக்குவரத்துக்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன. இதற்கான ஒப்புதலை இலங்கை அரசு ஏற்கனவே வழங்கி இருந்தது.
இந்த நிலையில் இந்த படகு சேவை அடுத்த மாதம் (ஜனவரி) மத்தியில் தொடங்குவதாக இலங்கை கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து மந்திரி நிர்மல் சிரிபலா டி சில்வா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
இலங்கையின் யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் ஏராளமான இந்தியர்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக காங்கேசன் துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இரு நாட்டு மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தொடங்கப்படும் இந்த சேவையால், இலங்கைக்கு அதிக அளவு வெளிநாட்டு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியாவுக்கு செல்லும் புத்த பயணிகளுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும். இந்த சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளர்களுடன் நடத்திய ஆலோசனையின்போது, படகு சேவைக்காக துறைமுகங்களில் வசதிகளை மேம்படுத்துமாறு அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி சுங்கத்துறை, குடியுரிமை மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துமாறு துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
3½ மணி நேர பயணம்
இதைப்போல தென் இந்தியாவில் இருந்து திரிகோணமலை மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படும். அதேநேரம் தலைமன்னாருக்கும், இந்தியாவுக்கும் இடையேயான படகு போக்குவரத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.
இவ்வாறு மந்திரி நிர்மல் சிரிபலா டி சில்வா கூறியுள்ளார்.
புதுச்சேரி மற்றும் காங்கேசன் துறை இடையேயான ஒரு வழி பயணத்துக்கு 60 டாலர் (சுமார் ரூ.4,800) கட்டணம் வசூலிக்கப்படும் என படகு உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். பயணி ஒருவர் 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச்செல்ல முடியும்.
இந்த சேவைக்காக பயன்படுத் தப்படும் படகுகளில் 300 முதல் 400 பேர் வரை பயணம் செய்ய முடியும். புதுச்சேரியில் இருந்து 3½ மணி நேரத்தில் காங்கேசன் துறையை அடைய முடியும் என் றும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதுச்சேரி-இலங்கை இடையேயான இந்த படகு போக்குவரத்து சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரும் பயனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.