நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக மும்பையில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை
|நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக மும்பையில் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டன. இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை தலைவர்கள் அறிவிக்கின்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 10 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது. இந்த பா.ஜனதா அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த 2-வது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டத்தை 2 நாட்கள் மராட்டிய தலைநகர் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பாட்னா மற்றும் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது பலத்தை காட்டுவதிலேயே தீவிரம் காட்டின. ஆனால் மும்பை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடந்த 2 நாட்களாக மும்பைக்கு வர தொடங்கினர். நேற்று ஏராளமான தலைவர்கள் குவிந்தனர். எதிர்க்கட்சி தலைவர்களின் அடுத்தடுத்த வருகையால் மும்பை நகரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையடுத்து மாலையில் மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள 'கிராண்ட் ஹயாத்' நட்சத்திர ஓட்டலில் கூட்டம் தொடங்கியது. மாலை 6 மணி முதல் தலைவர்கள் ஓட்டலில் கூட்டம் நடைபெறும் மாநாட்டு அரங்கிற்கு வரத் தொடங்கினர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்-மந்திரி), ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் (பீகார் முதல்-மந்திரி), ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்-மந்திரி), அந்த கட்சியை சேர்ந்த பாகவந்த் சிங் மான் (பஞ்சாப் முதல்-மந்திரி), சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரீய லோக்தள கட்சி தலைவர் ஜெயந்த் சிங் உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் ஒன்றுகூடி தீவிர ஆலோசனை நடத்தினர். இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்குவது, அமைப்பாளரை தேர்வு செய்வது, கூட்டணி கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பது போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பல முக்கிய கட்சிகள் இடம் பெற்று இருப்பதால் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்று பல கட்சிகள் கூறி வரும் நிலையில், பிரதமர் வேட்பாளர் பற்றி தற்போதே விவாதிக்க வேண்டும் என்று சில கட்சிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இதுபற்றியும், கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு விவகாரம் குறித்தும் தலைவர்கள் பேசினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் இரவு 8 மணிக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே விருந்து அளித்தார்.
இந்த நிலையில் முறைப்படியான ஆலோசனை கூட்டம் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு தலைவர்களின் கூட்டம் தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு கூட்டணியின் இலச்சினை (லோகோ) வெளியிடப்படுகிறது. இதையடுத்து மதியம் 2 மணி வரை தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
மராட்டிய காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படும் மதிய விருந்தை அடுத்து, பிற்பகல் 3.30 மணிக்கு தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.