காங். தலைவர் கார்கேவுடன் 'இந்தியா கூட்டணி' தலைவர்கள் நாளை மறுநாள் ஆலோசனை
|இந்தியா கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற குழுத்தலைவர்கள், மல்லிகார்ஜுன கார்கேவுடன் நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. இந்த கூட்டணி அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தன.
பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில் 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் நடைபெற்றது.
அதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களைவை தேர்தலில் இயன்றவரை ஒன்றாக இணைந்து போட்டியிடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி விரைவில் முடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற குழுத்தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ள நிலையில் இந்த கூட்டம் கூட உள்ளது. செப்டம்பர் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரும் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.