ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை
|பலத்த பாதுகாப்பை மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து முறையிட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளனர். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திப்பது தொடர்பாக இந்தியா கூட்டணி எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.