நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
|அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கூட்டம் தொடங்கும் முன்பு இந்தியா கூட்டணியில் உள்ள 234 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்துக்கு எம்.பி.க்கள் ஒவ்வொருவராக வருவது உண்டு. அதை மாற்றி எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் வலிமையை முதல் நாளே ஆளும் கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான நடைமுறையை கையில் எடுத்தன.
அதன்படி அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அணிவகுத்தனர். பிறகு அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக அணி வகுத்து நாடாளுமன்றத்துக்கு சென்றனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.